கம்யூனிஸ்ட்டுகளுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்த திமுக?? விளக்கம் கேட்கும் பிரேமலதா
தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 கோடி ரூபாய், வழங்கியதாக வந்த தகவலை குறித்து, விளக்கமளிக்க வேணடும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தேமுதிக படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, பழனியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வந்த தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டங்கள் குறித்து கேள்வியெழுப்பிய போது, ”குறுக்கு வழியில் முன்னேறத் துடிப்பவர்கள் தான் நீட் தேர்வில் தவறு செய்கிறார்கள்” என கூறினார்.
முன்னதாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க வேண்டும் என்பது விதி எனவும், அதனை எதிர்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக பெரிதுப்படுத்துகின்றனர்” எனவும் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.