திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (10:56 IST)

சிக்காமல் போக்கு காட்டிய காவலர் ஸ்ரீதர்! – நள்ளிரவில் நடந்த சேஸிங்!

சாத்தான்குளம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பலர் தலைமறைவான நிலையில் போலீஸார் தேடி கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாமாக முன் வந்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து உடனடி விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி வழக்குபதிவு செய்யப்பட்ட இரண்டு எஸ்.ஐகள் மற்றும் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை தேடும் பணி தொடங்கியது. அப்போது ஸ்ரீதர் உடனடியாக திருநெல்வேலிக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார். காரில் சென்ற அவர் கயத்தாறு சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக கங்கைகொண்டான் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக டிஸ்பி உத்தரவின்படி செயல்பட்ட போலீஸ் குழு ஒன்று ஸ்ரீதரை நள்ளிரவில் சேஸிங் செய்து சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தற்போது கொலை மற்றும் தடயங்களை அழிக்க முயற்சித்த வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.