புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:44 IST)

டிக் டாக் ஒரு ஆபாசக் களஞ்சியம்– ராமதாஸ் அறிக்கை

சமூக வலைதளங்களில் வேகமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் டிக் டாக் செயலியைக் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்க வேண்டும் என பாமக சார்பில் அறிககை வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக்டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே. பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே. தமிழ் பாடல்களுக்கு அல்லது தமிழ் படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளுக்கு வாயசைப்பதோ தான் நிரம்பிக் கிடக்கிறது.

டிக் டாக் மீது சமீபகாலமாக பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 12 வயதிற்குட்பட்டோர் டிக் டாக்கை உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அதை சரியாகப் பின்பற்றுவதில்லை என்பதற்கு குழந்தைகளைக் கொண்டே உருவாக்கப்படும் டிக் டாக் வீடியோக்களே சான்று. இந்தோனேசியா போன்ற நாடுகள் டிக் டாக்கிற்கு தடை விதித்துள்ளன. ஆனால் ஒரு சிலரோ இது தனி மனித சுதந்திரம் அதில் தலையிடக்கூடாது எனவும் அறிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக டிக் டாக்கிற்கு எதிராக இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும்  செயலி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட  டிக் டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. எந்த வித ஒழுங்குமுறைக்கு இலலாமல் டிக் டாக் செயலி செயல்படும் விதமும், அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையைத் தொலைப்பதும் கவலையளிக்கிறது.

ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதைப் போன்று, தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டிக் டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும்  பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன. எனவே டிக்டாக் செயலியைக் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்’ என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே திரைப்படங்களில் சிகரெட் மற்றும் மது குடிக்கும் காட்சிகளுக்கு எதிராக பாமக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.