1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2024 (18:02 IST)

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்.!

Anbumani
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  மாவட்ட, நகர அளவில்  மருத்துவ முகாம்கள்  நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக  சித்த ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு (Siddha Wellness & Awareness Campaign) என்ற தலைப்பிலான விழிப்புணர்வு  இரு சக்கர ஊர்தி பேரணியை  தில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை  தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. சித்த மருத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.
 
புதுதில்லியில் கடந்த  24-ஆம் நாள் புதன்கிழமை தொடங்கப்பட்ட இந்த இரு சக்கர ஊர்திப் பயணத்தில் 17 சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்கின்றனர்.  மொத்தம் 20 நாட்களுக்கு  நடைபெறவிருக்கும் 3333 கி.மீ நீள  விழிப்புணர்வு பயணம் மொத்தம் 8 மாநிலங்கள் மற்றும் அந்த மாநிலங்களில் உள்ள 21 நகரங்கள் வழியாக பயணிக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி,  மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி  உள்ளிட்ட  21 நகரங்களிலும்  விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
 
பல்லாயிரம் ஆண்டு பழமையும், சிறப்புகளும் கொண்ட சித்த மருத்துவம் குறித்து  இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் விழிப்புணர்வும், புரிதலும் இல்லை.  சித்த மருத்துவத்தின் சிறப்புகளில் முதன்மையானது அது நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்வதில்லை; நோயின் அடிப்படை என்ன? என்பதைக் கண்டறிந்து  அதற்கு தீர்வு காண்கிறது என்பது தான். சித்த மருத்துவத்தின் இந்த சிறப்பு குறித்து மக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம்  சித்த மருத்துவத்தை மேலும் பரவலாக்க முடியும்.
 
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, சென்னையில்  உருவாக்கிய தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இந்த விழிப்புணர்வு பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.  சற்று தாமதமானது என்றாலும் மிகச்சிறப்பான முயற்சி இதுவாகும்.  அதற்காக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும், அதன் சார்பில் இந்த பயணத்தை  ஏற்பாடு செய்தவர்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த பயணம் வெற்றி பெறவும், அதன் நோக்கத்தை எட்டிப் பிடிக்கவும்  வாழ்த்துகிறேன்.
 
அதேநேரத்தில் இந்தியாவின் மூலை முடுக்குகளிலும், உலகின் பிற நாடுகளிலும் சித்த மருத்துவத்தை கொண்டு செல்ல இந்த முயற்சி மட்டும் போதுமானதல்ல. இதை ஒரு நல்லத் தொடக்கமாக வைத்துக் கொண்டு  இந்தியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைநகரங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும்  20 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகரங்களிலும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்களையும்,  சித்த மருத்துவத்தின் தன்மையை மக்கள் அனுபவித்து புரிந்து கொள்ள மருத்துவ முகாம்களையும் நடத்த  மத்திய அரசின் ஆயுஷ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
Edited by Siva