1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (16:27 IST)

பிகில் பட இசை வெளியீட்டு விழா : ’அரசியல் பிகில்’ அடிப்பாறா விஜய் ?

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில், இயக்குநர் அட்லியின் இயக்கத்தில், நடிகர் விஜய் - நயன்தாரா உட்பட ஏராளமான  நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதற்காக விஜய்யின் ரசிகர்கள்  பேரார்வத்துடன் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே, இப்படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள ’சிங்கப்பெண்ணே ’மற்றும் நேற்று வெளியான ’உனக்காக’ ஆகிய பாடல்கள் எல்லாம் எஃப்எம், இணையதளம்,சமூக வலைதளம்  இளைஞர் - இளைஞிகளின் காலர்டியூனாக காதுக்குக் குளிர்ச்சியாக ஒலித்துக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில், மிகப்பிரமாண்டமான முறையில், இன்று, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. அதற்காக ஒட்டுமொத்த படக்குழுவுடன் விஜய் ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர். ஏன் விஜய்யும் தான்!
 

தமிழகத்தில் நடைபெற்று வரும அரசியல் நிகழ்வுகள் விஜய்யின் காதுகளுக்கு எட்டாமல் இருக்காது. அரசியலுக்கு வர ஆர்வமுள்ளதாகக் காட்டிக்கொண்டு, தன் படங்களில் அரசியல் வசனங்களை கூட்டிக்கொள்ளுக்கின்ற விஜய்  நிச்சயம் தற்போது நடைபெறுகின்ற ஆட்சி பரிபாலனம், மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனம் மற்றும் சினிமாத்துறையில் நிலவுகின்ற , ஆளுங்கட்சி (அதிமுக ) - எதிர்க்கட்சி ( திமுக) தரப்பினரின் மறைமுக , நேர்முக மோதலகளை எல்லாம் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார். அவர் கனிக்கத் தவறியிருந்தாலும்கூட அவரைச் சுற்றியுள்ளவர்கள் இந்த நிலவர விவரங்களை எல்லாம் அவரிடம் எடுத்துக்கூறி இருப்பார்கள் என்றே தெரிகிறது.
 

இந்த சமயத்தில் இன்று பிகில் பட ஆடியோ வெளியிட்டு விழா நடைபெறவுள்ளதால், விஜய் ரசிகர்கள்  பெரிதும் எதிர்பார்ப்பதும், அவரது பேச்சில் அரசியல் வருகையைக் குறித்துதான்.

கடந்த வருடம் ரிலீசான அவரது ’சர்கார்’ பட இசை வெளியீட்டின் போதும் அவரது மேடைப் பேச்சில் அரசியல் வாசம் அடித்தது. அவர் அரசியல் அரசியலுக்கு வந்தாலும், வரவில்லை என்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று இப்போது சொல்லும் ஆளுங்கட்சியாளர்கள், ’’சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது, ஏகப்பட்ட பிரச்சனைகள் செய்தனர். குறிப்பாக அதிமுக தொண்டர்கள் இப்படத்தில் அரசுக்கு எதிராகக் கருத்துக்கள், வசனங்கள் இருப்பதாகத் தியேட்டரில் இருந்த போஸ்டர்களை எல்லாம் அடித்து; கிழித்து ;எறிந்து ; நொறுக்கினர்.  அதன் பிறகு சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்குகள் எல்லாம் முடிந்தபிறகுதான் சர்க்கார் மறு ரிலீசாக தியேட்டர்களில் வெளியானது என்பதை மறந்திருக்க முடியாது.

அதனால் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அவர்களுக்கும் சற்று கலக்கமாகவே  இருக்கும் .காரணம் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள் தான்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று நடிகர் விஜய், நடிகர் அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு இடையே போட்டி இருப்பதாக சிலர் உசுப்பிவிட்டாலும், அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடித்தாலும், அஜித் - விஜய் ஆகிய இருபெரும் நடிகர்களும்  தங்களின் மார்கெட்டைப் போன்று தங்களில் உயரமும் தெரிந்திருக்கும். அதனால் எதற்கு அவ்வளவு எளிதில் தேவையில்லாமல் தம் சொந்தக் கருத்தை  வெளியிட்டு தன் சினிமா வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ளமாட்டார்கள்.

இதில் விஜய்யை விட அஜித் தன் பாதையை தெளிவாக வரையறை செய்துகொண்டுள்ளார்.  அஜித் தான் நடிக்கும் படத்தின் இசை ஆடியோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர் தன் வேலையை சரியாக கவனித்துக் கொண்டுள்ளார். அவரை அரசியலுக்கு அழைக்கும் சில அரசியல்வாதிகள், இயக்குநர்கள்தான் விஜய்யை அரசியலுக்கு வரும்படி மூட்டி விடுகிறார்கள் என்பதும் இதில் முக்கியம்.
 

உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டியை தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய்- அஜித்துக்கும் இடையே சமூக வலைதளத்தில் வைத்தாலும், இந்த அரசியல் களத்தில் அஜித் ஒதுங்கிவிட்டார் என்பது நிதர்சனம்.

அதனால் தன் சமகால ஒரே துறைசார்ந்த ஒரு போட்டி நடிகர் அரசியலில் குதிக்காததும், குதிக்கப்போவதில்லை என்ற அறிக்கை வெளியிட்டிருப்பதும் விஜய்க்கு பலமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், விஜய்க்கு திமுக வலைவிரிக்கிறது என்ற செய்திகள் சமீப காலமாகவே  மக்களின் காதைக் குடைகிறது. சினிமாதுறையைச் சார்ந்தவர்களில்  கட்சி தொடங்கி சிறப்பாக நடத்தி வெற்றிபெற்றவர்களில் அண்ணா, கலைஞர், எம்.ஜி,ஆர், ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரையும் தமிழகம் இதுவரை கண்டதில்லை.
 

மக்களின் நாயகனாக ஜொலித்த விஜயகாந்தும் அரசியலில் ஒதுங்கியிருக்கிறார். கமல்ஹாசன் தன் ஆதரவை பிக் பாஸ் என்ற விளம்பர மையத்தின் வழியே தன் கட்சியையும் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். ரஜினி இன்னும் தன் அரசியல் வருகைக்குக் காலம் நேரம் எல்லாம் பார்த்து,  தேதி குறிக்கக் காத்திருக்கிறார். நடிகர் கார்த்திக், டி. ராஜேந்தர் , மேடைகளில் நாம் தமிழராக உச்ச ஸ்தாயியில் முழங்கிவருகின்ற சீமான் போன்ற சினிமா பிரபலங்கள் தம் இருப்பைக் காட்டிக்கொண்டுள்ள சூழலில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எல்லோரும் எதிர்பார்ப்பதில் தவறொன்றுமில்லை.

இன்று, பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் மறுபடி அரசியல் பொறி பறக்க, விஜய் பேச வேண்டுமென அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ள போதிலும், அவர் எதிர்க்கட்சிகளையும் , ஆளுங்கட்சிகளையும், தனது சினிமா எதிர்காலத்தையும் நினைத்துதான் இன்று பேசுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

நடிகர் விஜய் மிகவும் பொறுமைசாலி. அவருக்குப் பிறகு சினிமாத்துறைக்கு வந்தவர்கள் காட்டிய அரசியல் வேகத்தை அவர் இதுநாள்வரை கையாளவில்லை என்பதுதான் அவர் மீது அவரது ரசிகர்கள் மிகப்பெரும் பெருமதிப்பு கொள்ளக்காரணம் என்று தெரிகிறது. ஆனால், தமிழக மக்களின் பிரச்சனைக்குக் குரல் கொடுக்காமல் வெறுமனே ஒரு மேம்போக்கான மேடை நிகழ்ச்சி மற்றும் அமைதியான போராட்டங்கள், கண்டம்  தெரிவிப்பதில் மட்டும் அவர் கலந்து கொண்டதாகவும் அவர் மீது விமர்சனங்கள் காட்டமாக வைக்கப்படுகிறது.
 

இந்த சூழலில் இன்று தன் 63 வது படமான பிகில் திரைப்படத்தில் இசை வெளியிட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதை  கேட்க தமிழ்நாடே காத்துக்கொண்டுள்ளது. இன்னும் சற்று நேரம் நாமும் காத்திருப்போம் அவர் அரசியல் பொடிகளைத் தன் பேச்சியில் தூவுகிறாரா என்பதையும் அவரைப் போலவே பொறுமையாக இருந்து கேட்போம் !