திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (16:51 IST)

’ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கூடாது?’ – நீதிமன்றத்தில் புதிய மனு!

தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில் இதுகுறித்து விசாரணை ஆணையம் அமைத்து, அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.

தற்போது மும்பையை சேர்ந்த ஆல் இந்தியா கேமிங் பெடரேஷன் என்ற அமைப்பின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதிற்கு உட்பட்டவர்கள், வெளிநாட்டினர் விளையாட கூடாது என்ற நிபந்தனை உள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஏற்படும் பண இழப்பு உள்ளிட்டவை குறித்த எச்சரிக்கைகளும் அரசின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டே ஆன்லைன் விளையாட்டு செயலிகள் செயல்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.



மேலும் ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் உள்ளிட்டவற்றை திறன் சார்ந்த விளையாட்டுகளாக நாகலாந்து, மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அங்கீகரித்திருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளை சூதாட்டம் என கூறி தடை செய்திருப்பது மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் எடுத்த முடிவு என்றும், அதனால் அந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவம்பர் 16ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K