1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (11:31 IST)

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஒரு மாதம் பரோலில் வந்தார்.


 
 
நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆகஸ்ட் 24-ஆம் தேதி அனுமதி அளித்ததை அடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் வேலூர் சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
 
20 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 26 வருடங்கள் கழித்து தன்னுடைய 46-வது வயதில் ஒரு மாதம் பரோலில் தனது வீட்டுக்கு சென்றார். அவரை அந்த பகுதி மக்கள் உணர்ச்சிப்பெருக்குடன் வரவேற்றனர். அவரது தாய் அற்புதம்மாள், சகோதரி ஆகியோர் கண்ணீர் மல்க பேரறிவாளனை வீட்டில் வரவேற்றனர்.
 
இந்நிலையில் அவரது பரோல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவரது தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க கோரிக்கை வைத்தார். தனது கணவர், மற்றும் தனது உடல்நிலையும் மோசமாக உள்ளது. எனவே இந்த நேரத்தில் ஏற்கனவே உடல் நலம் குன்றியுள்ள எனது மகன் பேரறிவாளன் தங்களுடன் இருக்க வேண்டும் எனவே அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என கூறினார் அற்புதம்மாள்.
 
இதனை அரசு பரிசீலிக்கும் எனவும், இது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இந்நிலையில் பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.