என்னடா நடக்குது இங்க.. நான் உயிரோடதான் இருக்கேன்! – பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
பெரம்பலூரில் உயிரோடு உள்ள பெண் ஒருவர் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் எலம்பனூர் சாலை பகுதியை சேர்ந்தவர் ரோஷ்ணி. இவருக்கும் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் சில வருடங்கல் முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சில மாதங்கள் முன்னதாக பணி நிமித்தமாக ஓசூர் சென்ற வீரராகவன் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் கணவனை இழந்த ரோஷ்ணி தனக்கு குழந்தைகளும் இல்லாததால் தனது பெற்றோர் வீட்டிற்கே சென்று விட்டார்.
மகளுக்காக வரதட்சணையாக அளித்த பொருட்களை திரும்ப தர சொல்லி வீரராகவன் குடும்பத்திடம் ரோஷ்ணி குடும்பத்தினர் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் பகுதி முழுவதும் கடந்த 7ம் தேதி ரோஷ்ணி இறந்துவிட்டதாக அவரது புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.