புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (13:20 IST)

குப்பைகளை தரம் பிரிக்காத மக்களுக்கு அபராதம்!? – திடக்கழிவு மேலாண்மை குழு!

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்காத மக்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மாநகரம் மற்றும் நகர பகுதிகளில் நாளுக்கு நாள் திடக்கழிவுகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அவற்றை அகற்றுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக் கொட்ட அனைத்து பகுதிகளிலும் இரண்டு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் குப்பைகளை அவ்வாறாக தரம் பிரித்து கொட்டுவதில்லை என்பதால் அனைத்து குப்பைகளும் ஒன்றாக கலந்தே கிடக்கின்றன.

இந்நிலையில் திடக்கழிவு சுத்திகரிப்பு குறித்த மாநில கண்காணிப்பு குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி குப்பைகளை தரம் பிரித்து தராதவர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தாலே திடக்கழிவு மேலாண்மையில் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.