வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (14:40 IST)

ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட மக்கள்! – வழக்கம்போல இயங்கும் கடைகள்!

மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல இடங்களில் வழக்கம்போல கடைகள் இயங்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மார்ச் மாதம் முதல் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றியதாக பல லட்சம் பேர் கைது செய்து விடுதலை செய்யப்பட்டனர். பல ஆயிரம் பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகளிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டனர்.

ஆனால் நேற்று டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுபானக்கடைகளில் கூடியதால் பல இடங்களில் சமூக இடைவெளியே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு பல வியாபாரிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் சிலர் கடைகளை திறக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் மக்கள் இயல்புநிலை திரும்பியதாக வழக்கம்போல கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு செல்வதால் சமூக இடைவெளி இல்லாத சூழல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.