1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (15:43 IST)

”காவல் துறையினரை பார்த்து மக்கள் பயப்படுகின்றனர்” - முன்னாள் டிஐஜி

காவல் துறையினரை பார்த்து மக்கள் பயப்படுகின்றனர் என்று திமுகவில் இணைந்துள்ள முன்னாள் டிஐஜி ஜான் நிக்கல்சன் கூறியுள்ளார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 20ஆம் தேதி ’நமக்கு நாமே’ என்ற முழக்கத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
 
அப்போது, முன்னாள் காவல்துறை டிஐஜி ஜான் நிக்கல்சன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜான் நிக்கல்சன் பல்வேறு காவல்துறை பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பின்னர் நிருபர்களிடத்தில் நிக்கல்சன் கூறுகையில், ”தமிழகத்தில் அரசு இயந்திரம் முழுமையாக முடங்கிக் கிடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது. வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மக்கள் பயத்தில் உள்ளனர்.
 
காவல்துறை முன்பு போல இல்லை. சுதந்திரம் இல்லை. செயல்பாடே இல்லாத துறையாக காவல்துறை தற்போதைய ஆட்சியில் மாறிவிட்டது. சாமானிய மக்கள் காவல் துறையினரைப் பார்த்துப் பயப்படக் கூடாது. ஆனால் இன்று காவல் துறையினரை பார்த்து மக்கள் பயந்து நடுங்கும் நிலையே உள்ளது என்றார்.