புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (13:40 IST)

பெற்றோர் தற்கொலை –தொடர்பு எல்லைக்கு அப்பால் மகள்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது காதலனோடு சென்று திருமணம் செய்துகொண்ட பெண்ணின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த அகத்தூர்சாமி-சொர்ணலதா தம்பதியினரின் மகள் சினேகா. இவர் சிவகாசியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடன் படிக்கும் இளைஞர் ஒருவரோடு நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

அதனையறிந்த சினேகாவின் பெற்றோர் தன் மகளைக் கண்டித்ததோடு அவரை அந்த கல்லூரியில் இருந்து பாதியிலேயே நிறுத்தி கோவையில் உள்ள வேறு ஒரு கல்லூரியில் சேர்த்துள்ளனர். ஆனாலும் தன் காதலை மறக்க முடியாத சினேகா தனது காதலனோடு தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது காதலை பெற்றோர் ஏற்கமாட்டார்கள் என்பதற்காக தனது காதலனோடு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால அதிர்ச்சியடைந்த சினேகாவின் பெற்றோர் விஷமாத்திரை விழுங்கி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளனர். விபரீத நிலையில் இருந்த அவர்களை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அகத்தூர் சாமி நேற்று முன் தினமும் சொர்ணலதா நேற்றும் உயிரிழந்தனர். சினேகாவின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பெற்றோர் இறந்த செய்தியை சொல்ல முடியாத பரிதாபகரமான சூழல் உருவாகியுள்ளது.