1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (09:44 IST)

கருத்து கேட்டுக்கிட்டே இருந்தா எப்போது ஸ்கூள் திறக்குறது..?

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும். 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் பரவிவரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதில் இருந்து பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. கிட்டத்தட்ட 9 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது. முன்னர் ஒரு முறை பெற்றோர்களிடம் பள்ளி திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டு பின்னர் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டது. 
 
இதனிடையே தற்போது மீண்டும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
அதோடு பெற்றோர் மட்டுமின்றி ஆசிரியர் கழக உறுப்பினர்களையும்,  அழைத்து கருத்துக் கேட்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையைத் தொகுத்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
 
மேலும், பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகளின் வசதிக்கேற்ப கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கல்வி ஆண்டில் ஒரு சில மாதங்களாவது பள்ளிகள் திறக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.