ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (21:14 IST)

வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம்; ஊரைச் சுற்றி பழத்தோட்டம்! - ஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்

வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம்; ஊரைச் சுற்றி பழத்தோட்டம்! - ஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்
`கடந்த 1 அக்டோபர் 2019,  மாலை 4 மணி அளவில்  வ. வேப்பங்குடி கிராமத்தில் பிறந்த கிராமத்தை பசுமையாக்க அமெரிக்காவில் பணியாற்றும் கணினி பொறியாளரின் முயற்சியாக நடந்தது.  அதன் பின்னர் 365 நாளும் மக்களுக்கு இயற்கை காய்கறி கிடைக்க வேண்டும் என்று தமிழகத்திலேயே முதல் முறையாக  சமுதாய காய்கறி தோட்டம். மரபு காய்கறி விதைகள் மூலம் சொந்த கிராமம் மட்டுமல்லாது மற்ற ஊர்களிலும் இயற்கை காய்கறி கிடைக்க  வழி வகை. சொந்த கிராமத்தில் உள்ள பள்ளியை காப்பதற்கு கல்வி சீர் திருவிழா. பள்ளியில் இயற்கை காய்கறி தோட்டம். அமெரிக்காவில் பணியாற்றினாலும் பிறந்த கிராமத்தை பசுமையாக்க முயலும் தனிமனிதனாக முயற்சி எடுத்திருக்கும் முயற்சியினை பற்றி பார்ப்போம். 
 
இவ்வாறு ஓவ்வொரு சமூக அக்கறையுள்ளோரும் மாற்ற முயலும்போது பசுமைகுடியாக ஒவ்வொரு ஊரும் மாறும் என்பது நிதர்சனமான உண்மை. 
 
*ஏன் மரம் நட வேண்டும்?*
 
மரம் வளர்ப்பின் இன்றியமையாமையினைப் பற்றி இன்று சொல்லித்  தெரியவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இயற்கையின் சீற்றம், மனிதன் இயற்கையினை பாதுகாக்காமல் விட்டதால் விளைத்தெடுத்தவையே என்பதையும், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடும், பணமீட்டுதலும் பொருள் சேர்த்தலும் அவசியமாகிப்போன வாழ்வில், இயற்கையினை காப்பதுதான் ஈட்டிய பொருளை சேமித்தலுக்கும் மானுடத்தின் பாதுகாப்பிற்கும் முக்கியமென்பது சமீபத்திய இயற்கை பேரழிவுகள் நமக்கு கற்றுத்தந்த பாடம். நிலத்தடி நீரின் அளவினை உயர்த்தவும் மழை பெறவும், வளம் பெறவும் மரம் வளர்க்க வேண்டும் என்று படித்ததை மறந்தாதால் வந்த விளைவு. இன்றைய நிலையில், தமிழகம் முழுக்க வெயிலாலும், மழையின்மையாலும் மக்கள் அவதிக்குள்ளாவது காண முடிகிறது. நல்ல குமுகம் மலரவேண்டுமெனில் தனிமனிதன் உயரவேண்டும். ஆனால்  இன்று ஒவ்வொருவரின் இயங்கியலுக்குமே இழுக்கு எனும்போது,  நம் குமுகாயம் அறிவார்ந்த, மேம்பட்ட வாழ்வை வாழ்ந்து வல்லரசாக நாடு மாறுமென்பது கேள்விக்குறியாகிறது. 
 
ஒரு தனிமனிதன் பெற்றோர், உற்றோர் இல்லாமல் வாழ முடியும். கல்வி இல்லாமல் உடல் உழைப்பால் கஷ்டப்பட்டு வாழ்ந்திட முடியும். செல்வம் இல்லாமல் ஏழையாக வாழ்ந்திட முடியும். எது இல்லாமலும் வாழும் ஒரு மனிதனால் நீர் இல்லாமல், நிழல் இல்லாமல், காற்று இல்லாமல் வாழ்ந்திட முடியாது. ஆறறிவு உள்ள  மனிதனுக்கு இந்த நிலை என்றால்  கண்ணுக்கு தெரியாத எத்தனையோ உயிர்களின் நிலை என்னவாக இருக்கும். மண் செழிக்க மழை பெருக மானுடம் மட்டுமா காக்கப்படும். மண்ணுக்கு அடியில் இருக்கும் மகத்தான பல்லாயிரக்கணக்கான் பல்லுயிர்களும் பெருகும். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் காடுகள் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக மாறுகிறது. ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரம் நட்டாலும் நம்மால் நாளைய சமூகத்திற்கு நல்ல சுற்று சூழலை விட்டு சென்றிட முடியுமா என்றால் அது கேள்விக்குறி. 
 
இந்த நிலை மாறவேண்டும், மானுடம் காக்கப்படவேண்டும். மனிதம் செழிக்கவேண்டுமென்று எடுக்கப்படும் சிறு முயற்சியாக நம்மால் முடிந்த வரையில் மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம்!! வளம் பெறுவோம்!! மண் காப்போம்!! மானுடம் காப்போம்!! என்ற முயற்சியில் குறைந்த  பட்சம் ஒரு கிராமத்தையாவது பசுமையாக்க முடியாதா என்று இம்முயற்சியை எடுப்பதாக கூறுகிறார். 
 
நான் என் நாட்டை நேசிக்கிறேன். என் மக்களை  நேசிக்கிறேன். உலகின் பல நாடுகளுக்கு சுற்றி நான் பல நாடுகளும் பசுமையாக இருப்பதை கண்டிருக்கிறேன். என் மக்களை நேசிக்கும் நான் என் நாட்டை நேசிக்கும் நான் என் கிராமத்தை என் பகுதியை மாற்றுவது என் கடமை என்று பதிகிறார் நரேந்திரன். 
 
*எப்பொழுது தொடங்கியது இந்த பயணம்* 
 
உலகத்தின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பணி  நிமித்தமாக சென்ற போது அந்த நாட்டின் அழகு அங்கு இருந்த பசுமை சூழல்  திரும்பினாலும் நீர்வளம், சுற்றிலும்  பனிமலைகள்  என்று இயற்கையின் கொஞ்சும் அழகு எங்கெங்கு நோக்கினும் வியப்பூட்டும். உலகின் பல நாடுகளில் இருக்கும் பலரும் ஒரு முறையாவது சுவிட்சர்லாந்து சென்றுவிட வேண்டும் என்ற ஏக்கத்தை தூண்டும் நாட்டில் 2 ஆண்டுகளாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர் பிறந்த குக்கிராமம் சுதந்திர இந்தியாவில், கரூர் மாவட்டத்தில் உள்ள வ. வேப்பங்குடி என்ற கிராமம் இன்றளவும் அதிகமான அடிப்படை வசதிகளற்ற கிராமம். மருத்துவமனை செல்ல அருகில் உள்ள கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். ஊரில் பேருந்து வசதிகள் மிக குறைவாக இருப்பினும் நிற்பதற்கு நிழற்குடை கூட இல்லாத கிராமம். அப்படியான கிராமத்தில் இருந்து உலகின் சொர்க்கம் என்ற ஊரில் வசிக்கும் வீட்டிற்கு மிக அருகில் மிக பெரும் ஏரி, எங்கும் பசுமை என்று ஒவ்வொருவரும்  ஏங்கும் தேவலோகம். இந்த உலகத்தில்தானா இருக்கிறது இது என ஆச்சரியப்படவைக்கும் அழகுப் பிரதேசம். அப்படியான ஊரில் வசித்தாலும் ஏன் நம்முடைய கிராமம் இன்னும் அப்படியே உள்ளது என்ற ஏக்கம் தான் இம்முயற்சியை எடுக்க வைத்து என்கிறார். 
 
அப்பொழுது 2016 ஆம் ஆண்டில் எடுத்த இந்த பயணம் தமிழகம் முழுதும் இருக்கும் பல மரம் வளர்க்கும்  அமைப்புகள் அனைவரையும்  கலந்து ஆலோசித்து கிட்டத்தட்ட 6 மாத காலத்திற்கும் மேலாக இப்பயணத்தில் பலருடன்  பேசி எப்படி மரம் வளர்க்கலாம் என்று ஆலோசித்து அதன் பின்னர் 10 அடி மரமாக நட்டு வளர்க்கும் முயற்சியினை தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொருவரும் மரம் நட்டுக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால்  வைத்த மரங்கள் யாவும் செழித்து வளர்ந்திருந்தால் இந்நேரம் தமிழகம் வனமாக மாறி இருக்க வேண்டும், ஆனால் 30 சதவீத மரங்கள் கூட வளரவில்லை. எனவே எப்படி மரம் வளர்க்கலாம் என்று பலரின் ஆலோசனைக்கு பிறகு  செப்பறை வளபூமி அர்ஜுனன் என்பவரின் ஆலோசனைப்படி  10 அடி மரமாக வளர்த்து நடுவதற்காக கிட்டத்தட்ட 1 லட்சம் பொருட்செலவில் முயற்சி எடுத்து ஒரு சில காரணங்களால் அதிகமான மரங்களை வளர்க்க முடியாமல் போனாலும் , தனது ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில்  10 அடி மரமாக மாதக்கணக்கில்  வளர்த்து  அதனை எனது ஊரில் நட்டு வளர்த்து பராமரித்து வருகிறார்.  மேலும் ஊருக்கு அருகில் உள்ள கிராமமான  தனது தந்தை வழி பாட்டி ஊரான ஜல்லிபட்டி என்னும் ஊரில் இதனை  கொடுத்தும் இருக்கிறார்.
  
இந்நேரத்தில் 2016 ல் மரம் வளர்க்க தனக்கு உதவிய அய்யம்பாளையத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் திரு. ச. செந்தமிழ் செல்வன் மற்றும் வ. வேப்பங்குடியை சேர்ந்த க. அன்பழகன் ஆகியோருக்கும் தன் நன்றியினை தெரிவிக்கிறார். 
 
*மரம் நடும் விழா பற்றி*
 
கரூர் மாவட்டம் இன்று அதிக வறட்சியான மாவட்டமாக மாறி வருகிறது. அதில் எனது கிராமமும் விதிவிலக்கல்ல. எனது கிராமத்தை சுற்றி உள்ள ஊர்களில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. அது எனது கிராமத்தையும் பாதித்து உள்ளது என்ன செய்யலாம் என்று யோசித்து வந்த வேளையில் ஊரில் நல்ல மழை பெய்திருக்கிறது. அதன் மூலம் மரம் நட்டால் மரங்களை நல்ல முறையில் வளர்க்க உதவும் என்று ஊரில் இருந்து  இயற்கை ஆர்வலர் திரு. இர. வேல்முருகன் மூலமாக தகவல் கிடைத்து அதன் பின்னர் கரூர் மாவட்ட சுற்று சூழல் கண்காணிப்பாளர் ஆசிரியர் திரு  ஜெரால்டு அவர்களின் தொடர்பு கிடைத்து முதலில் 50 மரம் நடலாம் என்று யோசித்து பின்னர் அது 200 மரமாக மாறி இருக்கிறது. மேலும் அவ்விழாவுக்கு நீதியரசர் திரு C. மோகன்ராம் அவர்களை அழைத்து வரவும், திரு J. திரவியம் முதுநிலை வேளாண் விஞ்ஞானி அவர்களையும்  மரம் நடும் விழாவுக்குசிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து வர    ஆசிரியர் திரு ஜெரால்டு அவர்கள் உதவி இருக்கிறார். 
ஆசிரியர் திரு ஜெரால்டு அவர்கள் கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக கரூரை பசுமையாக்க ஆக சிறந்த பணியினை செய்து வருகிறார். அவரின் வழிகாட்டுதலும் உதவியும் இந்த மரங்களை நட்டு பராமரிக்க மிக பெரும் பேருதவி என்றால் மிகையாகாது. ஆசிரியர் திரு, ஜெரால்டு அவர்களின் உதவியால் அருகில் உள்ள காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. ஆரோக்கியராஜ்  வருகை தந்ததோடு  அவர் பள்ளியை சேர்ந்த நாட்டுநல திட்ட பணி மாணவர்களை அழைத்து வந்து ஆதரவு புறிகிறார். திரு. விக்டர் பால் தலைமை ஆசிரியர், மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, ப. உடையாபட்டி அவர் பள்ளியை சேர்ந்த நாட்டுநல திட்ட பணி மாணவர்களை அழைத்து வருகிறார். மேலும் திரு. லட்சுமணன் ஆசிரியர் பணி நிறைவு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் , அரசு  மேல்நிலைப்பள்ளி, காணியாளம்பட்டி , திரு. சு. பழனிசாமி ஆசிரியர் , அரசு  மேல்நிலைப்பள்ளி, காணியாளம்பட்டி,  திரு. சக்திவேல், முதுநிலை ஆசிரியர் ,  அரசு மேல்நிலைப்ப்பள்ளி, தரகம்பட்டி, திரு. மலைக்கொழுந்தன் இடைநிலை ஆசிரியர் மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, ப. உடையாபட்டி என்று அந்த பகுதி பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் வருகை புரிந்து ஆதரவு தெரிவித்து நன்னோக்கில் செய்யப்படும் முயற்சிக்கு ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். 
 
மேலும் தொழிலதிபர் திரு. சிவம் ராஜேந்திரன் தேமுதிக கடவூர் ஒன்றிய செயலாளர் , தன்னார்வலராக விழாவுக்கு பரிசு பொருட்கள் வாங்க சென்ற போது என்ன விழா என்று கேட்டு  வருகை புரிந்த தொழிலதிபர் கரூர் ராஜசேகர், மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வ. வேப்பங்குடி, திரு வீராசாமி எழுத்தர் வரவனை ஊராட்சி  மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் குழுக்கள் என்று பலரின் ஆதரவும் இந்த செயலுக்கு கிடைத்தது நல்ல செயலை செய்யும்போது அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.   என்று பதிகிறார். இந்நேரத்தில் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த M. சித்ரா  கிராம புனரமைப்பு இயக்கம் திருச்சி,  A. சாந்தி செயலாளர் CSRDA தஞ்சாவூர், VRM பாலகிருஷ்ணன், தொழிலதிபர் ச, செந்தமிழ்செல்வன் ஆகியோருக்கும்  நன்றி பகர்கிறார் . 
 
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை வேளாண் விஞ்ஞானி திரு. J. திரவியம் அவர்கள் விழாவிற்கு  வருகை புரிந்து சிறப்பித்திருக்கிறார். அவர் மூலமாக இன்னும் அடுத்த முறை இயற்கை விவசாயம், இயற்கை விவசாய மேம்படுத்துதலுக்கான திட்டங்கள், மானியங்கள், நெகிழி ஒழிப்பு போன்றவைகளை மையப்படுத்தி கருத்தரங்கம் மூலமாக விழிப்புணர்வும் மேலும் ஒரு சமூக காய்கறி தோட்டம் உருவாக்கவும் திட்டமிருப்பதாக பகிர்கிறார். சமூக காய்கறி தோட்டம் ஆரம்பிக்க ஊரில் பசுமைப்படை இளைஞர் குழு ஆரம்பித்து வெற்றிடமாக இருக்கும் இடங்களில் எல்லாம் விவசாயம் செய்யும் அளவுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் செல்லும் இடங்களை அடையாளம் கண்டு அதன் பின்னர் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு காய்கறி விதைகளை நட்டு வைத்து பாதுகாப்பதன் மூலமாக யாரும் ஊரை விட்டு வெளியில் எங்கும் சென்று காய்கறி வாங்க தேவை இல்லாத கிராமாக மாற்ற முயலும்,  ஊருக்கே இயற்கை காய்கறிகளை இலவசமாகத் தரும் ஒரு பெரும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறார். இது தமிழகத்திலேயே முதல் முயற்சி.