ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (15:48 IST)

எடப்பாடியுடன் அதிருப்தி - தர்ம யுத்தம் 2.0 தொடங்கும் ஓ.பி.எஸ்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான உறவில் அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



 

துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
 
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் செயல்பட ஓ.பி.எஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி விடுவதில்லை. மேலும், அனைத்து இடங்களிலும் எடப்பாடியே முன்னிறுத்தப்படுகிறார். முக்கிய ஆலோசனகள் அனைத்தும், எடப்பாடி தலைமையில் ஓ.பி.எஸ் இல்லாமலேயே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் நடந்து வருகிறது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  


 

இந்நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளரான அதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவை இட்டுள்ளார். இதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார். 
 
எனவே, ஓ.பி.எஸ் மீண்டும் எடப்பாடி அணியில் இருந்து பிரிந்து தர்ம யுத்தத்தை மீண்டும் தொடங்குவார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.