1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (12:58 IST)

இதுதான் திராவிட மாடலா? ஒன்றரை வயது குழந்தையின் பாதிப்பு குறித்து ஓபிஎஸ் கேள்வி..!

அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியது தான் திராவிட மாடலா? என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஏழையெளிய, நடுத்தர மக்களுக்கு இலவசமான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதும், மருத்துவமனைகளை மேம்படுத்துவதும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் இருப்பதை உறுதி செய்வதும் மாநில அரசின் தலையாய கடமையாகும். ஆனால், தமிழ்நாட்டிலே இதற்கு முற்றிலும் முரணான நிலைமை நிலவுகிறது. நல்ல முறையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை! இதுதான் திராவிட மாடல் போலும்!
 
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. தஸ்தகீர் மற்றும் திருமதி அஜிஷா ஆகியோரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர் தலையில் நீர் என்பதற்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக மீண்டும் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தையினுடைய கைகளின் நிறங்கள் மாறியதாகவும், இதனை செவிலியர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும், பின்னர் 'கை அழுகியுள்ளது" என்று தெரிவித்து கையை அகற்ற வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம்தான் என்றும், தவறிழைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குழந்தையின் தாய் பேட்டி அளித்துள்ளார்.
 
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள், தன்னை சந்தித்துப் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி தன்னை புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கிறார். மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தன் ஒன்றரை வயது மகனின் கை அகற்றப்பட்டு, மனம் நொந்து போயுள்ள நிலையில், குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல். இதுவும் கடும் கண்டத்திற்குரியது.
 
சென்னை தலைமை மருத்துவமனையிலேயே இதுபோன்ற நிலை இருந்தால், மாவட்ட மருத்துவமனைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்தத் தவறுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும், இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தையின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by siva