ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (14:20 IST)

மரணத்திலும் அரசியல் செய்யும் எதிர்கட்சிகள்..! திமுக பெண் எம்.பி. காட்டம்..!!

Tamilachi
கள்ளச்சாராய விவகாரத்தில் துணிச்சலுடன் களத்தில் நின்று எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு என  திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்  தெரிவித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கள்ளக்குறிச்சி சம்பவத்தை விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை என கூறி சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
 
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச் சாராய சம்பவம் வருந்தத்தக்கது என தெரிவித்தார்.  தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்டெடுக்கட்டும் என்றும் அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 
சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சி, ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று எதிர்காலத்தில் நடக்காது’ என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு என்று குறிப்பிட்டார்.