1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (15:13 IST)

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர்..! – எதிர்கட்சிகள் கண்டனம்!

இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காததை எதிர்கட்சிகள் கண்டித்துள்ளன.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வாங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களும் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபடுகின்றனர்.

இன்று விநாயகர் சதுர்த்திக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

தான் சார்ந்த கொள்கையில் நம்பிக்கை உடையவராக இருப்பினும், மக்கள் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அவர்கள் கொண்டாடும் விழாவுக்கு வாழ்த்து தெரிவிப்பது முதல்வரின் கடமை என கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து பாஜக இணை அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அதிமுக மருது அழகுராஜ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.