ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (02:52 IST)

ஆன்லைன் ரம்மியால் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள் - ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள் தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’இளைஞர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் சீரழிக்கும் நோக்குடன் பல்வேறு வடிவங்களில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வடுகின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவான ஆன்லைன் சூதாட்டங்கள் மக்களின் பணத்தை மட்டுமின்றி, நிம்மதியையும் பறிக்கின்றன.
 
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்து கின்றனவோ, அதே அளவுக்கு பாதகத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் ஆன்லைன் சூதாட்டம் ஆகும். முகநூல் தொடங்கி செய்தி இணையதளங்கள் வரை எதை திறந்தாலும் அதில் வாசகர்களை கவரும் வகையில் பெரிய அளவில் தெரியும் விளம்பரங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களாகவே உள்ளன.
 
அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும் சூதாட்ட நிறுவனத்தின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1500 வரை போனஸ் வழங்கப்படும் என்றும், அதைக்கொண்டு அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரத்தில் வலை விரிக்கப்படுகிறது. இதற்கு மயங்கி, ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள் தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள்.
 
கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறி விட்டது. ஸ்மார்ட் தொலைபேசிகளின் வருகையால் பாமரர் கூட செல்பேசியிலேயே இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் விழுந்து விடும் ஆபத்து உள்ளது. இப்போதே ஏராளமான இளைஞர்கள் இந்த சூதாட்ட வலையில் விழுந்து தங்களின் மாத ஊதியத்தில் பெரும் பகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
ஆன்லைன் சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம் இணையதளம் மூலமாகவே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல் இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்து விட்டு தவிக்கின்றனர். ஆனாலும், சூதாட்டத்தின் பிடியிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை.
 
சூதாட்டம் என்பது மது, புகையை விட மோசமான போதை; மீளமுடியா புதைமணல் என்பது உலகம் அறிந்த உண்மை. இப்போது பிரபலமடைந்து வரும் ஆன்லைன் ரம்மி இணையத்தில் நஞ்சு போன்று பரவி லட்சக்கணக்கானவர்களை பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஒருமுறை இப்புதைமணலில் சிக்கினால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாகும்.
 
கடந்த காலங்களில் தமிழகத்தில் பெருக்கெடுத்த பரிசுச் சீட்டுக்களால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்தன. நாள் முழுவதும் உழைத்துச் சேர்த்த 100 ரூபாய் ஊதியத்தை பரிசுச் சீட்டு வாங்கி இழந்து விட்டு, குழந்தைகளை பட்டினிப் போட்டவர்களும்,  கடன்வலையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம்.
 
பாமக நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களால் 13 ஆண்டுகளுக்கு முன் பரிசுச் சீட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதன்பிறகு தான் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்தன. இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் தலைதூக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
 
சென்னை தியாகராயர் நகரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதிகள் நடைபெறுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரம்மி ஆடுவதும் சூதாட்டம்தான் என்றும், இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஆனால், அதை எதிர்த்து சூதாட்ட விடுதிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
 
அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டி ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மனுத் தாக்கல் செய்தன. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது. அத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை என்று கூறி, பல நிறுவனங்கள் அதை நடத்தி வருகின்றன.
 
உண்மையில், சூதாட்ட விடுதிகளில் விளையாடப்படுவதைப் போன்று தான் ஆன்லைனிலும் ரம்மி விளையாடப்படுகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்; இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன.
 
விதிமுறைகளே வகுக்கப்படாமல் ஆன்லைன் விளையாட்டுக்களை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு அனுமதிக்கின்றன என்பது தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே, புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கனவே உள்ள விதிகளின்படியோ ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.