ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2024 (15:29 IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

Kamal
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, சாதிவாரி கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தான பேச்சு என்றும் அது தவறு என்பது உலக அரசியலுக்கு தெரியும் என்றும் கூறினார்.  அந்தத் திட்டம் இந்தியாவிற்கு  தேவைப்படாது என்பது என்னுடைய கருத்து என்று அவர் தெரிவித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அறிவித்திருந்தால், இந்நேரம் இந்தியா என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார் .
 
இந்தியாவிலேயே நேர்மையானவர்கள் என்றால் அது தமிழ்நாடு தான் என்றும் ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னவுடன் கேட்டது தமிழ்நாடு தான் கமல்ஹாசன் குறிப்பிட்டார். இன்று நாட்டை நடத்திக் கொண்டிருப்பது நம்முடைய பணம் என தெரிவித்த அவர் அதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் அங்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, அங்கு கர்ணனாகவும், இங்கு கும்பகர்ணாகவும் இருக்கிறீர்கள் என்றும் விமர்சித்தார்.
 
அங்கு ராக்கெட் விட்ட நம்ம, இங்கு ஒரு துரும்பை கூட விட முடியவில்லை என்றும் ஒரு தமிழன் பிரதமராக ஆக முடியுமா? அதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். நீங்கள் மீண்டும் சினிமாவுக்கு சென்று விட்டீர்கள் முழுநேர அரசியல்வாதியாக மாறுங்கள் என்று சொல்கிறார்கள் என்றும் பல அரசியல்வாதிகள் சீட்டாட்டம் ஆடியதை நான் பார்த்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் முழு நேர அரசியல்வாதி யாரும் இல்லை என பெரியார் கூறியதை கமல்ஹாசன் சுட்டிக்காட்டி பேசினார்.



எனவே முழு நேர அரசியல்வாதி என்று யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் முழு நேர அரசியல்வாதியாக மாறி உங்கள் குடும்பங்களை தெருவில் விட்டுவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.