தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்
வரும் மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் நிலையில் இந்த தேர்தலில் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இதுகுறித்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது
இன்றைய விசாரணையின்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் தினகரனின் அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இதனையடுத்து இந்த வழக்கு நாளை முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது