மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்மலா தேவி !
ஜாமீனில் வெளியே வந்துள்ள நிர்மலா தேவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலியில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாலியல் தேவைகளுக்கு வழிநடத்தியட் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் நிர்மலா தேவி மாதம்தோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். கடைசியாக நீதிமன்றத்துக்கு ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிர்மலா தேவி, தனக்கு சாமி வந்துள்ளதாகக் கூறி நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டார். அப்போது தன் மீது குற்றம்சாட்டிய மாணவிகள், தூக்கிலிட்டு இறந்து விட்டதாகக் குறிசொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்தன. அதனால் நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.