10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு !
தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாதி ரீதியாக இல்லாமல் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடித் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதற்குக் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சி போன்ற தேசியக் கட்சிகளிடம் ஆதரவுக் கிடைத்துள்ளது. ஆனால் மாநிலக் கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. திமுக மற்றும் அதிமுக எம்.பி.கள் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். ஆனால் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையிலும் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 10 சதவிகித இடஒதுக்கீட்டை 16 கட்சிகள் எதிர்த்தன. 6 கட்சிகள் மட்டுமே ஆதரித்தன. அதனால் இதுவரை தமிழக அரசு இது சம்மந்தமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே இது சம்மந்தமாக தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுக்கு எதிராக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் ’தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை பாதிக்காமல் தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.