எண்ணும் எழுத்தும் - கல்வி திட்டத்தின் இலக்கு என்ன??
பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடுகட்ட அல்லது சரிசெய்ய தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் துவங்கப்படுகிறது.
கடந்த மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதனிடையே பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே எண்ணும், எழுத்தும் திட்டத்தையும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எண்ணும் எழுத்தும் திட்ட பிண்ணனி:
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தொலைநோக்கு 2025-க்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்பதாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எட்டு வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணிதச செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதை எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இதன் படி தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிப்பர், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வர்.