நெல்லை மேயர் சரவணன் பதவி தப்பியது.! கைவிடப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம்!!
நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் கைவிடப்பட்டதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், திமுகவினர் 44 வார்டுகளிலும், அவர்களது கூட்டணிக் கட்சியினர் 7 வார்டுகளிலும் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள், கட்சியின் முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் பதவிக்கு வந்தவர்கள். எனவே, அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர். மேயர் சரவணன் பதவிக்கு வந்த பிறகு, அவருக்கும், அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இவர்களுடைய மோதல் போக்கால் எம்எல்ஏ ஆதரவு திமுக கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் ஒருவர் கூட வராததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது என நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டதால், நெல்லை மேயராக சரவணன் தொடர்வார் என அவர் கூறினார்.
மேயர் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய திமுக கவுன்சிலர்களிடம் ஓரிரு நாட்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காததால் சரவணனின் மேயர் பதவி தப்பியது.