ஆந்திர சிறைகளில் அவதியுறும் 2 ஆயிரம் தமிழர்களுக்கு விடிவு எப்போது?


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (14:25 IST)
ஆந்திர மாநிலச் சிறைகளில் செம்மரம் கடத்தியதாக சுமார் 2 ஆயிரம் தமிழர்கள் கைதாகி அடைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
செம்மரங்கள் நிறைந்த திருப்பதி சேஷாச்சல வனத்தில், கடத்தல் கும்பல்கள், வறுமையில் வாடும் கூலித் தொழிலாளர்களிடத்தில் பண ஆசையை காட்டி கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதை நம்பிச் செல்லும் அப்பாவி தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டுவதில் ஈடுபடுகின்றனர்.
 
செம்மரக் கடத்தலை தடுப்பதாகக் கூறி ஆந்திர காவல்துறை 20 அப்பாவித் தமிழர்களை சுட்டுக் கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆந்திர அரசு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவை உருவாக்கி வனப்பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தின.
 
இந்நிலையில் கசங்கிய சட்டை, லுங்கியுடன் வருபவர்களை செம்மரக் கூலிகள் என கைது செய்வது தொடர்கிறது. கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி சென்னையில் இருந்து ரேணிகுண்டாவிற்கு கருடாதிரி விரைவு ரயிலில் சென்ற 32 தமிழர்களை எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆந்திர காவல்துறை கைது செய்தது.
 
அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத புதிய வனத்துறை சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். ஆந்திர மாநிலச் சிறைகளில் செம்மரம் கடத்தியதாக மட்டும் சுமார் 2 ஆயிரம் தமிழர்கள் கைதாகி அடைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :