திடீரென தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட நாமக்கல் எம்.எல்.ஏ: பரபரப்பு தகவல்
ஏழை பணக்காரர், பாமரர் பதவியில் இருப்பவர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் திணறி வருகின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு ஒரே வழி தனிமைப்படுத்துதல், சமூக விலகலை கடைப்பிடித்தல் என்பதுதான் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் மக்கள் சேவை செய்யும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் சில சமயம் பொது இடத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் அவர்களை அவ்வப்போது கொரோ தாக்கி வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் நாமக்கல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேபிபி பாஸ்கர் அவர்கள் கடந்த 15ஆம் தேதி மோகனூர் என்ற பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் பொதுமக்கள் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற இரண்டு பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர்களுக்கு கொரோனா சோதனை செய்த போது கொரோனா தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது
இது குறித்த தகவல் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கேபிபி பாஸ்கர் உள்பட அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நாமக்கல் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் தன்னைத்தானே தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அவர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு கொரோனா குறித்த எந்த அறிகுறியும் இப்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது