செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (13:15 IST)

தமிழகத்தில் கொரோனா பரவ முஸ்லிம்கள் காரணமா?

தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று மதியம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. திடீரென இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 124 ஆக உள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் மசூதி கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லி மசூதி ஒன்றில் கடந்த 13ம் தேதி நடந்த மதகுருமார்கள் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மதகுருக்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்துக்கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த கூட்டத்தில் சிலர் கலந்து கொண்ட நிலையில், இதில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
 
இந்த மத கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்தும் பலர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தாங்களாக முன்வர வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய்க் கிருமி பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத் எனும் சிறுபான்மை ஆன்மிகக் குழு ஒன்றின் செயற்பாடே காரணம் என்ற அடிப்படையில் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற பெயர் கூட இல்லாமல் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
மேலும், இந்தக் குறிப்பிட்ட மதக் குழுவினர் நடத்திய நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்கள், தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உட்பட முஸ்லிம் சமூகச் சான்றோர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி அதன் காரணமாக 99 விழுக்காட்டினர் மருத்துவப் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
 
இந்த உண்மைகளையெல்லாம் நன்கு தெரிந்த தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட மதக்குழுவினர் மீது மட்டும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் போல் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது. 
 
சிறுபான்மை சமூகத்தைக் குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.