ஆசை வார்த்தை சொல்லி பள்ளி மாணவி வன்கொடுமை! வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்!
திருச்சி மாவட்டம் முசிறியில் 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த ரங்கநாதன் என்ற இளைஞர் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் சொல்லி மயக்கியுள்ளார்.
அடிக்கடி மாணவியை பள்ளிக்கு செல்ல விடாமல் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றியதுடன், மாணவியுடன் அடிக்கடி உல்லாசமாகவும் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் அய்யம்பாளையம் அருகே உள்ள கோட்டூர் காவிரிப்படுகை பகுதிக்கு மாணவியை அழைத்து சென்ற ரங்கநாதன் அங்கு மாணவியோடு உல்லாசமாக இருந்துள்ளார்.
இதை ரங்கநாதனின் நண்பர்கள் திட்டமிட்டு மறைந்திருந்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மாணவியை மிரட்டியுள்ளனர். அதற்கு பிறகு மாணவியை அடிக்கடி வெளியே அழைத்து சென்ற ரங்கநாதன் தந்து நண்பர்கள் 5 பேருடன் சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இவ்வளவையும் அந்த மாணவி பெற்றோரிடம் சொல்லாமலே இருந்துள்ளார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு ஒழுங்காக செல்வதில்லை என்றும், நடத்தையில் சந்தேகமும் அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை 16 வயதிலேயே உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த சமூக நலத்துறையினர் அவர்களை பிரித்து மாணவியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
இதற்கிடையே ரங்கநாதனுக்கும் அவனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் ரங்கநாதன் மாணவியோடு உறவு கொண்ட வீடியோவை அவனது நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது மாணவியின் தந்தைக்கு தெரிய வர அவர் உடனடியாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ரங்கநாதன் மற்றும் அவனது இரண்டு நண்பர்களை கைது செய்துள்ளதுடன், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit By Prasanth.K