வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (11:44 IST)

சுய மரியாதையை மதிக்கும் தமிழர்கள் - ராகுலுக்கு ஸ்டாலின் நன்றி!

மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

 
நேற்று மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆம், பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்றும் உங்களால் அதை சாதிக்கவே முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்தார். 
 
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய  அரசு தொடர்ச்சியாக புறக்கணிப்பதாகவும் அவர் சாடினார். தனது உரையின் போது தமிழ்நாடு குறித்து அதிக முறை பேசியது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் ஒரு தமிழன் என ராகுல் பதில் அளித்து நகர்ந்தார். 
 
 இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அன்பிற்குரிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கருத்தாக்கத்தை புரட்சிகரமாக எடுத்துரைத்ததற்கு, ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் நான் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன். 
 
கலாசார மற்றும் அரசியல் வேர்களில் சுய மரியாதையை மதிக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு, நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.