செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (08:17 IST)

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஊரடங்கை விட்றாதீங்க! – மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரோனாவால் சென்னையில் மருத்துவர் உயிரிழந்த நிலையில் மக்கள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நரம்பியல் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் கொரோனாவால் இறந்த மருத்துவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால் எவ்வளவு இன்னல்களை சந்திக்க நேர்ந்தாலும் மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசு தளர்வுகள் எதுவும் அறிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கேட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.