தவறான செய்தி போடாதீங்க.. அச்சுறுத்தமால் விழிப்புணர்வு கொடுங்கள்! – ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊடகங்கள் மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “கொரோனாவிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா குறித்த அனைத்து தரவுகள், விவரங்களும் வெளிப்படையாகவே அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊடகங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் இல்லாமல் விழிப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
தனியார் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வெளியான புகாரையடுத்து தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்தியை முழுவதுமாக வெளியிடுங்கள், சந்தேகம் இருக்குமானால் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.