வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (11:31 IST)

தள்ளுபடி செய்த கோர்ட்; கையில் எடுக்கும் ஸ்டாலின்: மின் கட்டண விவகாரம் என்னவாகும்?

மின்கட்டண உயர்வு குறித்து நாளை காணொலியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. 
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படவில்லை என்பதும் அதன் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மின்சார ரீடிங் எடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
ஆனால் ஊரடங்கு தளர்த்தப் பட்ட பின் எடுக்கப்பட்ட ரீடிங்கில் பல மடங்கு மின் கட்டணம் அதிகமாக வந்ததாக பரவலாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடிகர் நடிகைகள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
 
இந்த வழக்கின் விசாரணையின் போது அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. 
 
அரசின் இந்த பதிலை ஏற்று மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து நாளை காலை 10 மணிக்கு காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.