செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:54 IST)

பேனர் வைத்தால் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்! – ஸ்டாலின் அதிரடி

பள்ளிக்கரணை பேனர் விழுந்த விபத்தை தொடர்ந்து தி.மு.க வில் பேனர் வைக்கும் நடைமுறையை அறவே ஒழிக்க வேண்டுமென ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பிரமுகர் வைத்த பேனர் விழுந்ததில் ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்தார். அவர் மேல் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தனது வருத்தங்களையும், அ.தி.மு.கவுக்கு எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தார் ஸ்டாலின். இந்நிலையில் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

அதில் “தி.மு.க நிர்வாகிகளோ, தொண்டர்களோ யாரும் கட்சி விழாக்கள், பொது விழாக்கள், வீட்டு விழாக்கள் போன்றவற்றில் போக்குவரத்து பகுதிகளிலோ, மக்கள் நடமாட்ட பகுதிகளிலோ பேனர்கள், கட் அவுட்கள் போன்றவற்றை வைக்கக்கூடாது. வாகன ஓட்டிகள், மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கப்படுவதை என்னால் இனியும் பொறுத்து கொள்ள முடியாது.

தேவைப்பட்டால் விளம்பரத்திற்காக ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் மட்டும் அந்தந்த வட்டார நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிடம் அனுமதி பெற்று, மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் பாதுகாப்பாக வைக்கலாம்.

அப்படி யாரவது எனது அறிவுரையை மீறி ஃப்ளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைத்தால் அவர்கள் மேல் கட்சி தகுந்த நடவடிக்கையை எடுக்கும். மேலும் இதுபோன்று பேனர்கள் வைக்கும் எந்த விழாவிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இதற்கு முன்னால் பேனர்கள் வைத்து செலவு செய்யும் பணத்தை வேறு ஏதாவது நல்ல காரியத்திற்காக செலவிடலாம் என ஸ்டாலின் தி.மு.க தொண்டர்களுக்கு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது பள்ளிக்கரணை சம்பவத்தால் பேனர் ஒழிப்பை தனது கட்சியில் தீவிரப்படுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.