இனி மதுரை லட்டுக்கும் பேமஸு! – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் லட்டு பிரசாத திட்டம்
தமிழ்நாட்டிலேயெ முதன்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பதி தேவஸ்தானம் போலவே லட்டு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கால சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். மதுரை எப்படி தூங்கா நகரமோ, அதுபோல மீனாட்சி அம்மன் கோவில் “திருவிழாக்களின் கோவில்”. வருடம் முழுவதும் அங்கே திருவிழா நடந்து கொண்டே இருக்கும். ஆண்டுதோரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
சமீபத்தில் மிக தூய்மையான கோவில்களுக்கான விருதை தமிழ்நாட்டிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. இந்நிலையில் வருடம்தோறும் வருகை புரியும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்குவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மேலும் சிறப்படைய செய்யும் என நிர்வாகம் கருதியுள்ளது. அதனால் திருப்பதி போல நாள்தோறும் பயணிகளுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க முடிவெடுத்துள்ளனர். அறநிலையத்துறை சார்ந்த கோவில்களில் பிரசாதத்திற்கென தனி கடைகள் இருக்கும். அங்கே பணம் கொடுத்து பிரசாதம் வாங்கி கொள்வார்கள். அதை முதன்முறையாக தவிர்த்து இலவச பிரசாதம் வழங்க இருக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்.
இதுபற்றி கூறிய கோவில் தக்கார் , இதற்கான முறையான அனுமதி அரசிடம் பெறப்பட்டு, 5 லட்ச ரூபாய்க்கு லட்டு செய்யும் எந்திரம் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். எதிர்வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி முதல் லட்டு பிரசாதமாக வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜிகர்தண்டா, மீனாட்சி அம்மன் கோவில் போன்ற மதுரையின் பேமஸ் சமாச்சாரங்களோடு இனி லட்டும் இணைந்து கொள்ள இருக்கிறது.