சைதாப்பேட்டைக்கு விசிட் அடித்த ஸ்டாலின்! – மாற்று திறனாளிகளுக்கு உதவி!
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சைதாப்பேட்டை பகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்குள்ள மாற்று திறனாளிகளுக்கு நிதி உதவி அளித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
மேலும் சில தன்னார்வலர்களும் மக்களுக்கு தேவையான உதவிகளை நேரில் சென்று செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை பகுதிக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் தீபக்கிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த உணவு பொருட்களை மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு கொண்டு சென்று அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.