1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (10:30 IST)

தண்ணீரை காப்பாற்றினால்தான் தமிழ் நிலம் செழிக்கும்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ!

MK Stalin
இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உயிர்கள் செழித்து வளர தண்ணீர் அவசியமான ஒன்றாக உள்ளது. உலகத்தில் 4ல் மூன்று பங்கு கடலால் சூழப்பட்டிருந்தாலும் நன்னீரின் அளவு மிகவும் குறைவே. நிலத்தடி நீர், மழை நீர் வழியாகதான் பெரும்பாலும் நன்னீர் பெறப்பட்டு சேமிக்கப்படுகிறது. பல நாடுகளில் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக தண்ணீர் தினம் மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இன்று உலக தண்ணீர் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர் “உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானது தண்ணீர், இப் பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் தண்ணீர். குளம், குட்டை, ஏரி, நீரோடை, ஆறு, அருவி, கடல் என்று நீர்நிலையின் அளவை வைத்து பிரித்து பெயர் சூட்டினர் தமிழர்கள்.

கடல் நீரை முன்னீர் என்றும் ஆற்றும் நீரை நன்னீர் என்றும் குடிநீரை இந்நீர் என்றும் குளிந்த நீரை தண்ணீர் என்றும் நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம். அப்படியான தண்ணீரை காப்பது நம் கடமை. நம்மை காக்கும் நீரை வீணடிக்க கூடாது. நீர்நிலைகளை தூர்வாரி வைத்திருக்க வேண்டும். தண்ணீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புவி வெப்பமயமாகி வருகிறது. இதில் இருந்து நம்மை காப்பது தண்ணீர்தான். நீரில்லையேல் உயிர் இல்லை என்பது உணர்ந்து தண்ணீரை காப்போம்.. தாய் நிலத்தை காப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K