சென்னை வரும் மோடி... கைகோற்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி!
சென்னை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூட உள்ளனர்.
மோடி சென்னை வருகை:
பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். ரூ.31,400 கோடி மதிப்பில் இந்த திட்டங்களை துவங்கி வைக்கிறார். சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு:
பிரதமர் மோடி சென்னை வருகையை அடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. ஆம், சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை 5:45 மணிக்கு சென்னை வரும் நிலையில் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈ.வே.ரா சாலையை தவிர்க்கவும்:
பிரதமரின் வருகையையொட்டி ஈ.வே.ரா சாலை, தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சாலைளை தவிர்க்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மோடியை வரவேற்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள்:
சென்னை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்க உள்ளனர். விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.