கருணாநிதியை சந்தித்த அழகிரி: மீண்டும் திமுகவில் ஆதிக்கமா?
திமுக தலைவர் கருணாநிதியை இன்று கோபாலபுர இல்லத்தில் நீண்டு நாட்களுக்கு பின்னர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி.
திமுகவில் எந்த காலத்திலும் தீராத ஒன்று குடும்ப பிரச்சனை. தலைவர் பதவி விவகாரத்தில் மு.க.அழகிரி ஸ்டாலின் மீது நேரடி குற்றச்சாட்டுகளை வைக்க அவர் கட்சியில் இருந்தே தூக்கப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் அழகிரி.
ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட்டை இழந்து படுதோல்வியடைந்ததை அடுத்து மு.க.அழகிரி மீண்டும் ஸ்டாலின் மீது பாய்ந்தார். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அழகிரியை மீண்டு கட்சிக்குள் சேர்க்க அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சிலர் பல முயற்சிகள் எடுத்தன, ஆனால் ஸ்டாலின் தரப்பு அதற்கு கடுமையன எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வியடைந்ததை அடுத்து, ஸ்டாலின் கருணாநிதியாக எப்போதுமே முடியாது. அவர் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றிபெறாது என கூறினார். இந்நிலையில் இன்று கோபாலபுர இல்லத்துக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அழகிரி, புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க கருணாநிதியை சந்திக்க வந்ததாக கூறினார்.