இது பெரியார் மண்; திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது! – யாரை தாக்குகிறார் செங்கோட்டையன்!?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரியார் மண்ணில் வேறு யாரும் நுழைய முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இரு தரப்பினரிடையே விவாதம் ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் பாஜக கூட்டணி வேட்பாளராக முதல்வர் பழனிசாமியையே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் ” திராவிட மண்ணில் யாராலும் திராவிட இயக்கத்தை அசைத்து விட முடியாது; இது தந்தை பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மண்; நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாண்புமிகு அம்மாவால் தீமையகற்றபட்ட மண்; இம்மண்ணிலே எவராலும் நுழைந்து விடமுடியாது.” என்று கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டு சில கட்சிகளை குறித்து இவ்வாறு பேசியுள்ளாரா அல்லது தேசிய கட்சிகள் குறித்து பொதுவாக பேசியுள்ளாரா என அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.