அரையாண்டு தேர்வு ரத்து! ஆனா எல்லாருக்கும் இல்ல? – அமைச்சர் அறிவிப்பு!
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இந்த மாதம் நடத்த வேண்டிய அரையாண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த ஜூன் மாதம் முதலாக ஆன்லைன் மூலம் பள்ளிகள் நடைபெற்றாலும் பருவ தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த மாதத்தில் நடத்த வேண்டிய அரையாண்டு தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன் “தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலமாக மட்டும் அரையாண்டு தேர்வினை நடத்திக் கொள்ளலாம். நடப்பு ஆண்டில் பாடத்திட்டங்களில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடங்களும், 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு 35% பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.