ஏழைகளிடம் இருந்து 8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்த வங்கிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்..!
மினிமம் பேலன்ஸ் வைக்காத வங்கி கணக்காளர்களிடமிருந்து 8,500 கோடி ரூபாய் அபராத தொகை பிடித்தம் செய்துள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இது குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை கூட வைத்திருக்க முடியாத ஏழைகளிடமிருந்து 8,500 கோடி ரூபாய் வங்கிகள் அபராத பிடித்தம் செய்துள்ளது பாஜக அரசின் ஏழைகள் விரோத போக்கை படம் பிடித்து காட்டுகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்திய குடிமக்களுக்குள் வருமான ஏற்றத்தாழ்வு பெருகியிருப்பதும், பெரும் முதலாளிகளின் சொத்துக்கள் பல மடங்கு உயர்ந்திருப்பதும் பெரும்பான்மையாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை கொண்ட இந்தியாவிற்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் திமுக இடம் பெற்றிருந்த போது மினிமம் பேலன்ஸ் பிடித்தம் செய்யவில்லையா? நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த திமுக ஏன் வங்கிகள் மினிமம் பேலன்ஸ் பிடிக்க கூடாது என்று உத்தரவிடவில்லை? பாஜக ஆட்சிக்கு வரட்டும் என்று காத்து இருந்தீர்களா அமைச்சரே? என்று பதிவு செய்து வருகின்றனர்
Edited by Siva