1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (12:33 IST)

வீட்டை பூட்டிய கடன் கொடுத்தவர்கள்: தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

சேலத்தில் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே உள்ள ரெட்டிபட்டியில் பால் வியாபாரம் செய்து வந்தவர் மணி. சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வட்டிக்காரர் ஒருவரிடம் 5 லட்ச ரூபாய் பணம் பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் மணியால் கடனை அடைக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி மணியின் வீட்டிற்கு வந்து அவரையும், அவரது மனைவியையும் மிரட்டி விட்டு சென்றிருக்கின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார் மணி.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மணியின் வீட்டிற்கு வந்த கடன்காரர்கள் வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பிறகு மணி அவர்களிடம் கெஞ்சி எப்படியாவது பணத்தை கொடுத்து விடுவதாக கூறி சாவியை வாங்கி வந்திருக்கிறார். தொடர் கடன் மிரட்டல்களால் மனம் உடைந்த மணி தன் மனைவியோடு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

காலையில் மணியிடம் பால் வாங்க வரும் மக்கள் மணி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடன் பிரச்சினையால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரெட்டிப்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.