வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (11:50 IST)

போலீஸ்காரர்கள் வீடுகளுக்கு பால் சப்ளை கிடையாது! – பால் முகவர்கள் சங்கம் கறார்!

போலீஸ்காரர்கள் வீடுகளுக்கு பால் சப்ளை கிடையாது! – பால் முகவர்கள் சங்கம் கறார்!
தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நாளை முதல் பால் சப்ளை கிடையாது என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்ற அனைத்து இடங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை போலீஸார் தண்டிக்கும் அதே சமயம், எந்த தவறும் செய்யாத சாதாரண வியாபாரிகளும், மக்களும் கூட போலீசாரின் நடவடிக்கையில் பாதிக்கப்படுகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான பாலை கொண்டு செல்லும் முகவர்களை காவல்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும், வாகனங்களை பறிமுதல் செய்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதவிர பால் விற்பனையகங்களையும் மூட சொல்லி அடிக்கடி போலீஸார் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீஸாரின் இந்த செயலை கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் நூதனமான போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பால் சப்ளை செய்யப்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். பால் முகவர்களின் இந்த நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.