1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (00:31 IST)

எம்.ஜி.ஆரும், நானும் முதல்வராக இருந்தபோது... : கருணாநிதி விளக்கம்

எம்.ஜி.ஆரும், நானும் முதல்வராக இருந்தபோது அண்டை மாநிலமான கர்நாடகத்துடன் சுமூகமான உறவை தொடர்ந்தோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பிரச்சினை கடுமையாக இருக்கும்போது அதுபற்றி எதுவும் கூறாமல், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் கடும் வேதனைக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளை அவர் மக்களாகவே கருதவில்லை போலும்.
 
காவிரிப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எங்களை கொதிக்க வைப்பதாக வாட்டாள் நாகராஜ் கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆரும், நானும் முதல்வராக இருந்தபோது அண்டை மாநிலமான கர்நாடகத்துடன் சுமூகமான உறவை தொடர்ந்தோம்.
 
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது பேச்சுவார்த்தை மூலம் அவரை திமுக அரசு மீட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்தியபோது அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினரை காட்டுக்குள் அனுப்பியது அதிமுக அரசு. இதனால் நாகப்பாவின் உயிர் பறிபோனது. 1991-ல் பங்காரப்பா முதல்வராக இருந்தபோதும், தற்போது சித்தராமையா முதல்வராக உள்ளபோதும் ஜெயலலிதா அரசு நட்பு ரீதியான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கவில்லை இதனால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர்.
 
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பை 32 ஆக குறைக்க வேண்டும் என யுபிஎஸ்சி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பரிந்துரையை பிரதமர் மோடி ஏற்கவே கூடாது. வயது வரம்பு குறைக்கப்பட்டால் கிராமப்புற இளைஞர்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே சிறிது சிறிதாக சிதைக்கப்பட்டு வரும் சமூகநீதிக் கொள்கை பெரும் சோதனைக்குள்ளாகி விடும். எனவே, தற்போதுள்ள வயது வரம்பே தொடர வேண்டும்.
 
பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேரந்த மாரியப்பன் தங்கம் வென்றார். தற்போது ஆண்டுகளுக்கான ஈட்டி எறிதலில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜஜாரியா தங்கம் வென்றுள்ளார். இருவரது சாதனையும் பாராட்டுக்குரியது.
 
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ''கர்நாடகத்தைச் சேர்ந்த யாரும் வன்முறையில ஈடுபடவில்லை. தமிழகத்தில் தான் கன்னடர்கள் மீது திட்டமிட்ட வன்முறை நடத்தப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த கன்னடர்கள் தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்'' என கூறியுள்ளார்.இது கடும் கண்டனத்துக்குரியது.
 
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் முயற்சி இது. மத்திய அமைச்சராக இருப்பவர் ஒரு மாநிலத்துக்கு ஆதரவாகப் பேசுவது சரியல்ல. எந்த மாநிலத்திலும் வன்முறை நடைபெறக் கூடாது என தடுக்க வேண்டியவர், சொந்த மாநில அரசியலுக்காக ஒருதலைபட்சமாக கருத்து கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
 
அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவை பத்திரிகையாளர்கள் அணுகவே முடியவல்லை. அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை எளிதல் அணுக முடிகிறது. 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் செவ்வாய்க்கிழமை தோறும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன் என்றார். ஜனநாயகம் பற்றிய கவலை இருந்தால் தானே அவருக்கு பத்திரிகைகளைப் பற்றிய கவலை வரும்.
 
அதிமுக ஆட்சியில் சிறைச்சாலைகள் கூட பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவருகிறது. வேலூர் சிறையில் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். இது நடந்து ஒரு வாரத்துக்குள் சென்னை புழல் சிறையில் ராம்குமார் மர்மான முறையில் இறந்துள்ளார். இதனை தற்கொலை என காவல்துறையும், கொலை என மற்றவர்களும் கூறுகின்றனர்.
 
கடந்த மாதத்தில் கடலூர் சிறையில் 2 கைதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பபட்டது. கோவை மத்திய சிறையில் செந்தில்குமார் என்ற கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், இதுபற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை'' என்று கூறியுள்ளார்.