1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (20:06 IST)

சிதம்பரம் விவகாரத்தால் பிசுபிசுத்து போன திமுக ஆர்ப்பாட்டம்!

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்ய கோரியும், மத்திய அரசின் நடவடிக்கைகளையும் எதிர்த்து நாளை திமுக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு நாடு முழுவதையும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ஊடகங்களும் இதுகுறித்து செய்தி வெளியிட்டது. ஆனால் நேற்றிரவு முதல் ப.சிதம்பரம் கைது, முன் ஜாமீன் குறித்து பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் ஊடகங்கள் திமுகவின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முக்கியம் தரவில்லை. நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களிலும் அனைத்து ஊடகங்களிலும் ப.சிதம்பரம் குறித்த செய்திக்கே முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் திமுகவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன்னரே பிசுபிசுத்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
ஆர்ப்பாட்டம் செய்வது எம்பிக்களாக இருந்தாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதால் நாளைய ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்த போராட்டம் திமுகவின் பலத்தை நிரூபிக்க பயன்படுமா? அல்லது மத்திய அரசால் அடக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்