புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:41 IST)

ஸ்வீட் பாக்ஸுக்குள் மறைத்து 1.50 கோடி கடத்தல் : அதிர்ச்சி வீடியோ

துபாயிலிருந்து இந்தியா வந்த இரு நபர்கள் ஸ்வீட் பாக்ஸில் துபாய் பணத்தை கடத்தி வந்தபோது சுங்க அதிகாரிகள் வளைத்து பிடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

துபாயிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக அன்னிய நாட்டு பணத்தை சிலர் எடுத்து வருவதாக ஐதராபாத் சுங்க அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்துள்ளது. இதனால் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது துபாய் விமானத்தில் வந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டிருந்திருக்கிறார். அவரை பிடித்து அவரிடமுள்ள பொருட்களை சோதனையிட்டனர். ஆனால் அதில் வெளிநாட்டு பணம் எதுவும் இல்லை.

அப்போது அவரிடமிருந்த ஸ்வீட் பாக்ஸின் அட்டை வழக்கத்தை விட கணமாக இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அந்த அட்டையை பிரித்து பார்த்த போது கட்டு கட்டாக சவுதி அரேபிய ரியால் நோட்டுகள் கிடைத்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக வந்த இன்னொரு துபாய் விமானத்தில் வந்த மற்றொரு நபரும் இதே முறையில் பணத்தை கொண்டு வந்திருந்தார். அவரையும் சுங்க அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

விசாரித்ததில் இருவரும் ஒன்றாக திட்டமிட்டே பணத்தை கடத்தியது, வெவ்வேறு விமானங்களில் பயணம் மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் சவுதி ரியால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீட் பாக்ஸிலிருந்து பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து எடுத்த வீடியோ காட்சி இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.