வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (14:09 IST)

முதல்வரின் சிறப்பான நடவடிக்கையால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் எம்.சி.சம்பத்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா காலத்திலும் ஒரு லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஹோஸ்டியா அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நடவடிக்கையினால், ஒசூரில் சிறு,குறு தொழில்நிறுவனங்களும் வலிமையடைந்துள்ளன. 2,000க்கும் அதிகமான சிறு,குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், ஒசூர் முதன்மை தொழில் நகரமாக விளங்கி வருகிறது. ஒசூர் மற்றும் குருபரப்பள்ளி, சூளகிரியில் மேலும் ஒரு சிப்காட் தொடங்கப்படுவதால், சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
 
மேலும் கொரோனா காரணமாக சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களின் மூலம், தமிழகத்தில் முதலீடுகளை செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. டெல், நோக்கியா மற்றும் ஆட்டோ மொபைல், கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன. இதன்மூலம், தொழில் வளர்ச்சியில் உலகளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
2019ம் ஆண்டில் ரூ. 3 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 304 தொழில் நிறுவனங்கள் 24 சதவீத உற்பத்தி செய்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையில் 82 சதவீதம் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் மட்டும் 55 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரையில் ரூ.40,304 கோடி முதலீடுகளின் மூலம், 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்திலும் முதலீடுகள் அதிகம் ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
 
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்