புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (08:50 IST)

திருவள்ளுவர் கோவிலுக்கு கும்பாபிஷேகம்! இந்து அறநிலையத்துறை!

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிள்ளையார்ப்பட்டியில் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டன. முக்கியமாக திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதில் திராவிட கட்சிகளுக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையே பெரும் மோதல் போக்கு ஏற்பட்டது.

திருவள்ளுவருக்கு இந்து முறைப்படி வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் பிறந்ததாக கருதப்படும் சென்னை மயிலாப்பூர் பகுதியில் அவர் பெயரிலேயே ஒரு கோவில் உள்ளது. தற்போது திருவள்ளுவர் பிரச்சினை அடங்கி விட்ட நிலையில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கடந்த 2001ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 18 வருடங்கள் கழித்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இதை சமூக வலைதளங்களில் இந்து மத ஆதரவாளர்கள் பலர் பகிர்ந்து “திருவள்ளுவர் மதமற்றவர்” என்று கூறியவர்களிடம் கேள்வியெழுப்புவதால், மீண்டும் திருவள்ளுவர் பிரச்சினை வலுபெறுமோ என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது.