1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: நாமக்கல் , வெள்ளி, 8 மார்ச் 2024 (08:14 IST)

போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் கைது

நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களிடையே,போதை மாத்திரை பழக்கம் உள்ளதாக காவல் துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போது, வலி நிவாரணிகளை நீரில் கரைத்து இன்ஜெக்ஷன் ஆக நரம்புகளில் செலுத்தி போதையை உருவாக்கும் கூலி தொழிலாளர்கள் குறித்த தகவல் கிடைத்ததின் பேரில், போலீசார் கடந்த 10 தினங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
அப்பொழுது வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் என்னும் பகுதியில், கட்டிட கூலித் தொழிலாளர்கள் மயான பகுதியில் தங்கள் பயன்படுத்திய ஊசி மருந்துகளை வீசி செல்லும் பொழுது பிடித்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
 
இதில் வட மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
 
இதனை அடுத்து இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க எலச்சிபாளையம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு விமானம் மூலம் சென்று அங்கு பதுங்கி இருந்த சித்திக்சவுத்ரி என்கிற தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து, வெப்படை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
 
காவல் துறை விசாரணையில்  தமிழகத்தில் அரிதாக கிடைக்கக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள், குஜராத் மாநிலத்தில் சகஜமாக கிடைப்பதால், அங்கிருந்து பெற்று அவற்றை கொரியர் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தான்.
 
இது சம்மந்தமாக  நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா,  பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது....
 
தனிப்படை போலீசார் உதவி மூலமே இந்த குற்றத்தை கண்டுபிடிக்க முடிந்தது முதலில் வந்த ரகசிய தகவலை அடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் வலி நிவாரண மாத்திரைகள் மூலம் போதை மருந்துகளை பயன்படுத்தியது தெரிய வந்தது.
 
தமிழகத்தில் 99 சதவீதம் மருந்து கடைகளில் கிடைக்காத வலி நிவாரண மாத்திரை, இந்த மாத்திரை கேன்சர் நோயாளிகளுக்கு அதிகமாக வழங்கப்படக் கூடியது அதுவும் மருத்துவர் கண்காணிப்பிலேயே வழங்கப்பட்டு நோயாளிகளும் கண்காணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த மாத்திரை வகை குஜராத் மாநிலத்தில் எளிதில் கிடைப்பதால் அவற்றை கொரியர் மூலம் பள்ளிபாளையம் வெப்படை பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகிறார்கள்.
 
போதைக்கு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் அடிமையாகாமல் இருப்பதற்காக அந்தந்த பகுதி ஆய்வாளர்கள் உதவியுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
 
இதற்கு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் -ஆசிரியைகள் பெரும் உதவி புரிந்து வருகின்றனர்.
 
மேலும், சிறு சிறு குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் தற்பொழுது கைது செய்யப்பட்டவர்களுக்கு குண்டர் சட்டத்திற்கு ஈடான  சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற செயல்களை முற்றிலும் தடுப்பதற்காக அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை விசாரித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
 
குறிப்பாக இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ள்ளனர் முக்கிய குற்றவாளியான சித்திக்சவுத்ரி என்கிற தினேஷ்குமார் மற்றும் ஈரோடு பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.